மிட்டாய் கவிதைகள்!

தூக்குக்கல்வி

July 22, 2013

sleeping in library

தவழ்ந்தாடும் சிறுவயதில்
தலைக்கனமாய் படிப்பெதற்கு?
தன்வாழ்வை பாசம்மறைக்க
தலைஅடகில் சேர்த்தினாரே!

ஆடியோடி விளையாடக்கூட
ஆரம்பப் பயிற்சிதந்து,
எட்டாவது வரையிலே
எப்படியோ பலபெற்றேன்!

அதன்பின் அரசுத்தேர்வால்
அலைச்சலும் அதிகமாக,
இருவருடம் ஒருபுத்தகம்
இடைவிடா நெட்டுருத்தல்!

கடிகாரம் வேகமாக
கண்ணிமைக்க மறந்துபோக,
கண்ணாடி போட்டதாலே
கல்வியாளன் ஆனேனே!

தூங்கும் நேரம்மாற
தலையணையாய் புத்தகங்கள்!
தாய்தகப்பன் வந்தாலும்
தாவிச்செல்ல தடையேனோ?

நான்காண்டு கடுங்காவல்
நாள்முழுதும் படித்ததாலே,
நடப்பறியாமல் அகராதியில்லா
நூலகமாய் நானானேன்!

பொறியியல் பெரும்படிப்பென
பெரியதொரு பல்கலைசேர்ந்தும்
புதிதாய்த்தெரிய ஆசையில்லை
புரிந்துகொள்ளவும் தெரியவில்லை!

புத்தகப்புழு ஆதலாலே
பக்குவம் துளியுமில்லை?
பட்டெனத் தோல்விவந்ததும்
பறந்துவா தூக்குக்கயிறே!  

சுமைகூட்டுஞ் சமுதாயத்தால்
சக்கையாக்குங் கூடமெல்லாம்
சரஸ்வதி படங்காட்டிச்
சம்பாதிக்கும் நல்லவர்கள்!

நெருக்கடிகள் பலதந்து
நொறுக்கிவிட வேண்டாம்!
நொடிவேகம் நகர்ந்தாலும்
நாடிபோல் இருக்கட்டும்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்